Monday, October 27, 2014

லாட்டரி சீட்டு விற்றவர் இன்று ஐ.ஏ.எஸ்.,அமெரிக்க அதிபர் அளித்த கவுரவம்


காரைக்குடி:“நான் கற்ற கல்வியால் தான் எனக்கு அமெரிக்க அதிபரின் மாளிகையில் கவுரவம் கிடைத்தது,” என காரைக்குடியில் வருமான வரி இணை கமிஷனர் நந்தகுமார் பேசினார்.
காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் யுனிவர்சல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன ஆண்டு விழா நடந்தது.

இணை கமிஷனர் நந்தகுமார் பேசியதாவது:நாம் சாப்பிடுவதில் கூட நல்லவற்றை தேர்வு செய்கிறோம். ஆனால் படிப்பு விஷயத்தில் மட்டும் பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வாய்ப்பை தருவதில்லை. வாழ்க்கையை எட்டிப்பிடிக்கும் போது கிடைப்பதுடன் நின்று விடுகிறோம். சிறந்த கல்வியை தேர்வு செய்வது கட்டாயம்.

நான் எனது சிறுவயதில் வீட்டுப்பாடம் கொடுத்தால் எழுதத் தெரியாது. ஆறாம் வகுப்புடன் என் படிப்பு நின்றது. பின், லாட்டரி சீட்டுக்கள் விற்பனை, மெக்கானிக் ஷாப், ரேடியோ பழுதுபார்த்தல் பணிகளை செய்தேன். படிப்பை நிறுத்திய பின் தான் அதன் அருமை தெரிந்தது. பணி செய்து கொண்டே படித்தேன். அரசுக் கல்லுாரியில் பி.ஏ., (ஆங்கில இலக்கியம்) சேர்ந்தேன். கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்றேன். கடந்த 2004ல் 12 லட்சம் பேர் எழுதிய சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன்; ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்து பின், விருப்பத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையில் பணிபுரிகிறேன்.

வீட்டிலிருந்து சாப்பிட ஓட்டலுக்கு 5 கி.மீ., நடந்தே சென்றேன். கல்வி தந்த வளர்ச்சியால் எனக்கு பிரதமர், ஜனாதிபதி அளித்த விருந்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த நான் உத்தரபிரதேச தேர்தல் பார்வையாளராக இருந்தேன். என் பணியை அறிந்த அமெரிக்க அதிபர் ஒபாமா என்னை தேநீர் விருந்துக்கு அழைத்து கவுரவப்படுத்தினார். இந்த கவுரவம் அனைத்தும் என் கல்விக்கு தான் கிடைத்தது.இவ்வாறு பேசினார்.

பாரத் கல்வி குழும தலைவர் விஸ்வநாத கோபாலன், இணை ஒருங்கிணைப்பாளர் ஆதீனம், கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் கல்யாணராமன் பங்கேற்றனர்.

Thursday, October 16, 2014

10 வயது சிறுவனின் கனவை நிறைவேற்றி நெகிழச்செய்த ஐதராபாத் போலீஸ் கமிஷனர்..



மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்தில் சல்யூட் மரியாதையை ஏற்கும் காட்சி. | படம்: மொகமது யூசுப்
மரணத்தை எதிர்நோக்கும் 10 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றியது ஐதராபாத் காவல்துறை. சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை ஐதராபாத் போலீஸ் கமிஷனர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர்.

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவன் 'Terminally-ill' நோயாளி ஆவார். டெர்மினலி இல் என்றால் அவருக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் சம்பவிக்கும். காரணம் இவருக்கு இருக்கும் நோய்க்கு எந்த வித சிகிச்சையும் பலனளிக்காது என்று முடிவுகட்டப்பட்ட ஒரு நோயாளி ஆவார் அவர்.

சாதிக்கிற்கு இருக்கும் நோய்க்கு மருத்துவ தீர்வு கிடையாது என்ற செய்தி அவரது குடும்பத்தினருக்கு 5 மாதங்கள் முன்புதான் தெரியவந்துள்ளது. இவர் எம்.என்.ஜே. இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆன்காலஜி என்ற அரசு மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் சாதிக்கின் தந்தை மொகமது ரஹீமுதீன், விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவென்றே செயல்படும் 'மேக் எ விஷ் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்புடன் தொடர்பு கொண்டு காவல்துறையில் உயர் பதவியாற்ற வேண்டும் என்ற சாதிக்கின் தீராத அவாவை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

அந்த அமைப்பின் உதவியுடன் ஐதராபாத் உயர்மட்ட காவல்துறையுடன் தொடர்பு கொண்டு சாதிக்கை ஒருநாள் கமிஷனர் நாற்காலியில் அமரவைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் நன்றாக இஸ்திரி போடப்பட்ட போலீஸ் சீருடை, பதக்கங்கள், சாதனை பேட்ஜ்கள், பளபளக்கும் ஷூக்கள், தெலங்கானா போலீஸ் என்று பொறிக்கப்பட்ட போலீஸ் துறை பெல்ட் ஆகியவற்றுடன் கமிஷனருக்கேயுரிய மிடுக்குடன் சாதிக் ஐதராபாத் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.

ஒருநாள் கமிஷனர் கையெழுத்திடுவதற்காக கோப்புகள் சாதிக் மேசையில் வைக்கப்பட்டன.

ஐதராபாத் நகர கமிஷனர் எம்.மகேந்தர் ரெட்டி நெகிழ்ச்சியுடன் சாதிக்கை வரவேற்று தனது நாற்காலியில் சிறுவனை உட்காரச் செய்தார். சில மணி நேரங்கள் கமிஷனராக சாதிக் பணியாற்றவும் அனுமதித்தார்.

என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு சாதிக் சட்டென, “நான் ரவுடிகளைப் பிடிப்பேன்” என்றார் உற்சாகமாக. மேலும் நகரை அமைதியாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும், போக்குவரத்து விவகாரங்களை கவனிப்பேன் என்றும் 10 வயது கமிஷனர் கூறி அனைவரையும் அசத்தினார்.

முன்னதாக புதிய கமிஷனரை எப்படி வரவேற்க வேண்டுமோ அத்தகைய சடங்குகளுடன் கமிஷனர் அலுவலகத்தில் சாதிக்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறுவன் சாதிக் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் நடந்து வந்த போது, 'புதிய கமிஷனரை' காவல்துறை ஊழியர்கள் வரவேற்றனர்.

அதன் பிறகே கமிஷனர் மகேந்தர் ரெட்டியின் அறையில் அவரது நாற்காலியில் அமர்ந்தார் சாதிக்.

செய்தியாளர்களிடம் சாதிக் கூறும் போது, “என்னுடைய 3 மாமாக்கள் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். மேலும் இரண்டு பேர் கரீம்நகரில் காவல்துறையில் சேவை செய்து வருகின்றனர்” என்றார்.

மகனின் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்ட கசப்பான நிலையில் சற்றே மகிழ்ச்சியடைந்த தந்தை மொகமது ரஹிமுதீன், "எனது மகன் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால் வாழ்க்கை அவனை வேறு ஒன்றிற்கு காத்திருக்கச் செய்துள்ளது" என்றார்.

"மரணத்தை எதிர்நோக்கும் சிறுவனின் கனவை நிறைவேற்ற முடிந்தது எங்களுக்கு மன நிறைவை அளிக்கிறது" என்று கமிஷனர் மகேந்தர் ரெட்டி தெரிவித்தார்.

Wednesday, October 15, 2014

கனவு நாயகன் கலாம்; இன்று முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள்

திரு.கலாம் அவர்களுக்கு நாம் ஒரு சல்யூட் அடிப்போம்.
'உறக்கத்தில் வருவதல்ல கனவு... உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு' என்ற தாராக மந்திரத்தை 64 கோடி இந்திய இளைஞர்களின் மனதில் விதைத்தவர் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். வளர்ந்த இந்தியாவாக 2020க்குள் உருவாக்கும் லட்சியத்துடன், இன்றைக்கும் இந்தியா முழுவதும் சென்று அனைத்து தரப்பினரையும், குறிப்பாக 18 கோடி இளைஞர்களை சந்தித்து உங்களால் முடியும் என்ற நம்பிக்கையை விதைத்து ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து வருகிறார்.

நாட்டின் 11வது ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் அரசியலமைப்பு சட்டப் பணியை முறையாக நிறைவேற்றியதுடன், தன் பணி முடிந்து விடவில்லை என்றார். அனைத்து தரப்பினரும் ஒரு தொலை நோக்கு பார்வையுடன், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன், ஒற்றுமையாக உழைத்தால் வளர்ந்த இந்தியாவை 2020க்குள் அடைய முடியும் எனக்கூறி நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
தொலை நோக்கு திட்டங்கள் :


ஜனாதிபதியாக இருந்த போது 15 மாநிலங்களுக்கு சென்று, அந்தந்த மாநிலங்களின் வளம், சிறப்பான செயல்பாடு, தீட்ட வேண்டிய தொலை நோக்கு திட்டங்கள் குறித்து சட்டசபைகளில் விளக்கினார். பல மாநிலங்கள் அந்த திட்டங்களை இலக்காக கொண்டு செயல்பட்டன.லோக்சபாவில் 'வளர்ந்த இந்தியா 2020' தொலை நோக்கு திட்டத்தை குறிப்பிட்டு, எம்.பி.க்களுடன் சிற்றுண்டி சந்திப்பு நடத்தி, அதன் முக்கியத்துவத்தை விவரித்தார். எல்லோருக்கும் எரிசக்தி பாதுகாப்பு என்பது குறித்து சிந்தித்து, அதனை 2030க்குள் அடைய இலக்கு நிர்ணயித்து மக்களுக்கு விளக்கினார். ஐதராபாத்தில் ஜனாதிபதிக்கென ஒரு சொகுசு மாளிகை உண்டு. ஆண்டுக்கொரு முறை ஜனாதிபதிகள் ஓய்வெடுக்க பயன்படுத்துவர். அந்த மாளிகையை, பயோ எரிசக்திக்கென கொள்கை வகுக்க மாநாடு நடத்த பயன்படுத்த வேண்டும் எனக்கூறி அங்கு அனைவரையும் அழைத்து விவாதித்து அதில் பிறந்தது தான் 65 ஆயிரம் டன் பயோ எரிசக்தி கொள்கை.
கல்வியில் மாற்றம் :


தொடக்க கல்வியில் மாற்றங்கள் வேண்டும் என ஒரு குடியரசு தின விழாவில் கலாம் வலியுறுத்தியதால், சி.பி.எஸ்.இ., கல்வி முறையில் மாற்றம் ஏற்பட்டது. பேராசிரியர் யஷ்பால் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. அவரது வலியுறுத்தலால், 'நேஷனல் நாலெஜ் நெட்ஒர்க்' என்ற இணைப்பை மத்திய அரசு உருவாக்கி 5000 உயர்கல்வி நிலையங்களுக்கு உத்வேகத்தை கொடுக்க வைத்தது.உயர்கல்வி, ஆராய்ச்சி என சிந்தித்தவர் ஒரு நாள் என்னையும், மேஜர் ஜெனரல் சுவாமிநாதனையும் அழைத்து, இந்தியாவின் அடுத்த கட்ட ஆராய்ச்சி நானோ அறிவியல் தொழில்நுட்பத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என விவாதித்தார். மாநாடு நடத்தி அதற்கான திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்டார். இதுதொடர்பாக அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டங்களை தீட்டி, ரூ.1500 கோடிக்கான முதற்கட்ட அறிக்கையை நாங்கள் சமர்ப்பித்தோம்.
விஞ்ஞானிகளுக்கு விருந்து :



வழக்கமாக ஜனாதிபதி மாளிகையில் விருந்து வைபவம், உலகத் தலைவர்களுக்கு மட்டுமே நடக்கும். இம்முறையை தகர்த்து, இந்திய விஞ்ஞானிகளுக்கும், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கும் ஜனாதிபதியாக இருந்த போது விருந்துக்கு (பேன்குவட் பார்ட்டி) ஏற்பாடு செய்தார். அந்த விருந்துக்கு அவர் அழைத்த மற்ற விருந்தினர்கள் யார் தெரியுமா? திட்ட கமிஷன் துணை தலைவர், மனித வள மேம்பாட்டு அமைச்சர், அறிவியல் தொழில் நுட்ப அமைச்சர். அவர்களிடம் மாநாட்டின் பரிந்துரையாக சமர்ப்பித்த ரூ.1500 கோடி நானோ தொழில் நுட்ப ஆய்வறிக்கையை விளக்கினார். அத்திட்டம் மத்திய அரசால் உடன் ஏற்கப்பட்டு, இரு கட்டங்களாக நிதி ஒதுக்கப்பட்டு, நானோ அறிவியல் ஆராய்ச்சி இந்தியாவில் உத்வேகம் பெற்றது.
தினமலர் நாளிதழும் கலாமும் :



கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும் என 'புரா' திட்டத்தை கொடுத்தார். கலாம் ஜனாதிபதியானதும் முதலில் வலியுறுத்தியது நதிநீர் இணைப்பு திட்டம். அப்போதைய பிரதமர் வாஜ்பாய், அறிஞர் குழு அமைத்து திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டார். அதிதிறன் நீர் வழிச்சாலை திட்டத்தால், 1500 பி.சி.எம் வெள்ள நீரை 15000 கி.மீ., நீர்வழிச்சாலையில் மாநிலங்கள் பயன்பெற முடியும் என தினமலர் நாளிதழில் கலாமும், நானும் இணைந்து எழுதினோம். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி, நதிநீர் இணைப்பு ஆய்வறிக்கை தயாரிக்க ரூ.100 கோடி ஒதுக்கியிருக்கிறார். இதனால் விவசாயம் செழிக்கும். இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு கிடைக்கும். 2050ல் உலகம் 9 பில்லியன் மக்கள் தொகையாக மாறும்போது, முதல் உணவளிக்கும் நாடாக இந்தியா திகழும்.
இரண்டு கோடி மரங்கள் :



நுாறு கோடி இந்தியர்கள் 100 கோடி மரம் நட வேண்டும் என்ற இயக்கத்தை ஒவ்வொருவரும் செய்ய கலாம் கேட்டுக் கொண்டார். பல்வேறு மாநிலங்களுக்கு அவர் சென்று வலியுறுத்தியதால், 2 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. பதினெட்டு கோடி மாணவர்களிடம் ஒரு உறுதி மொழி ஏற்க வைத்தார். அதாவது உன் வீட்டை, தெருவை சுத்தமாக்கினால், நாடு சுத்தமாகும் என்றார். தற்போது பிரதமர் மோடி அதை ஒரு இயக்கமாக மாற்றி விட்டார்.ஒருவரை பற்றி பல குற்றச்சாட்டுகளை கூறினால் கலாம் அதை அமைதியாக கேட்பார். அவர்களை பற்றி இரு நல்ல விஷயங்களை கூறி, அதை மட்டும் பார் என்பார். நம் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துவதுடன், அதில் என்ன புதுமை இருக்கிறது எனக் கேட்டு நம்மை மாற்றி சிந்திக்க வைப்பார்.
உன்னதமான தலைவர் :


நற்சிந்தனைக்கு இடமளிப்பார். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பார். பேசுவதிலும், எழுதுவதிலும், எண்ணத்திலும் இந்தியாவின் வளர்ச்சியை பற்றி மட்டுமே சிந்திக்க வைப்பார். அறிஞர்களை அழைத்து விவாதித்து, நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்து கொண்டு அதன் மீதான முடிவை அறிவிப்பார். ஒரு கொள்கை சார்ந்த விவாதத்தில், அவர் தன்னையே விமர்சிக்குமளவுக்கு நேர்ந்தாலும், உரிமை கொடுத்து விமர்ச்சிக்க வைத்து, அதில் ெதளிவு பெற்று நல்ல முடிவு எடுப்பதில் அவருக்கு நிகர் அவர் தான். பழிவாங்கும் உணர்வு அவரிடம் இருக்காது. தன்னிடம் பயிற்சி பெறும் யாராக இருந்தாலும், அவர்களது தலைமை பண்பை வளப்படுத்துவதிலும், பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கி வெற்றி ெபறவைப்பதிலும் கலாம் ஒரு உன்னத தலைவர்.
தினமும் 10 ஆயிரம் பேர் :



64 கோடி இந்திய இளைஞர்களை நம்பி இந்த 83 வயதிலும் மாதத்தில் 20 நாட்கள் இந்தியா முழுமைக்கும் சென்று ஒரு நாளிலே குறைந்தது 10 ஆயிரம் மக்களை, இளைஞர்களை சந்தித்து உரையாடுகிறார். வழிகாட்டியாக, இளைஞர்களின் கனவு நாயகனாக இருக்கும் கலாம் பிறந்த இந்த நன்னாளில், 'இந்தியாவை வளமான நாடாக்கி காட்டுவோம்' என உறுதி மொழி ஏற்போம்.குழந்தைகளின் கேள்விக்கு பதிலளிக்கையில் டாக்டர் கலாம், '125 கோடி மக்களின் முகத்தில் என்றைக்கு புன்னகை தவழ்கிறதோ, அன்று தான் என் நாடு வளமான நாடு என்பதன் அர்த்தம் விளங்கும்' என்றார். அது தான் தன் பணி என்றார். கலாமின் கனவை நனவாக்குவோம்.

Monday, October 13, 2014

பூ பூக்கும் ஓசை

Photo Gallery

பூ பூக்கும் ஓசையை இந்த வண்ணத்து பூச்சியாவது கேட்டிருக்குமா.... இடம்: தேனி.

அப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்



படிக்கிற போது யாரை 'ரோல் மாடலாக' கருதினாரோ அவரிடமே பணிபுரியும் நிலை உருவானால்? அந்த வெற்றி வாழ்க்கைக்கு சொந்தக்காரர்... விஞ்ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக ஆர்வலர் என பல்வேறு முகங்கள் இவருக்குண்டு. விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிப்பை துவக்கி, நாட்டின் முதல் குடிமகனுக்கு அறிவியல் ஆலோசகராக பணிபுரிந்திருந்தாலும் கூட மண் மணம் மாறாமல் பேசுகிறார். அவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் வி.பொன்ராஜ் மதுரை வந்த அவருடன் பேசியதிலிருந்து...
* பள்ளி, கல்லூரி காலங்கள் எப்படி?
விருதுநகர் மாவட்டம் தோணுகால் என் சொந்த ஊர். பள்ளி படிப்பை அங்கு துவக்கினேன். ஆமாத்தூரில் தொடக்க கல்வி, விருதுநகர் சுப்பையா நாடார் பள்ளியில் மேல்நிலை கல்வி முடித்தேன். நாடார் கல்லூரியில் இளங்கலை படிப்பு, பாரதிதாசன் பல்கலையில் எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன்.
போர்விமான தயாரிப்பு பணியில்:


* விஞ்ஞானியாக விரும்பினீர்களா?
பள்ளியில் பிளஸ் 2 படித்த போதுதான், இந்தியாவின் முதல் சொந்த தயாரிப்பான எஸ்.எல்.வி.,3, ரோகிணி ஸ்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது. பின்னணியில் விஞ்ஞானி அப்துல் கலாம் இருந்ததையறிந்து அவரை 'ரோல் மாடலாக' எண்ணி விஞ்ஞானியாக விரும்பினேன். பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸில் ஜூனியர் விஞ்ஞானியாக 1989ல் சேர்ந்தேன். மதுரை காமராஜ் பல்கலையில்1991-95 வரை ஜூனியர் இன்பர்மேஷன் சயின்டிஸ்ட் ஆக பணிபுரிந்தேன். மீண்டும் பெங்களூரு ஏரோநாட்டிக்கல் டெவலப்மெண்ட் ஏஜன்ஸியில் சயின்டிஸ்ட் 'சி' அந்தஸ்தில் சேர்ந்தேன். அதன் இயக்குனர் ஜெனரலாக இருந்த அப்துல் கலாம் கீழ் இலகுரக போர் விமான தயாரிப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டியது.
* கலாம் கீழ் பணிபுரிவோம் என எதிர்பார்த்தீர்களா
ரோல் மாடலாக நினைத்தவரிடமே(அப்துல் கலாம்) பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. 2002ல் அவர் ஜனாதிபதியானதும் என்னையும் வரச் சொல்லி விட்டார்.
* என்ன காரணம்?
பணிதிறமையை பார்த்து தான். தகவல் தொழில் நுட்ப தொடர்புக்கு அவருக்கு ஆட்கள் தேவையாக இருந்தது.
விசாலமான பார்வை:


* கலாமுடன் பணிபுரிந்த அனுபவம்?
அப்துல் கலாம் எப்போதும் உயர்வான எண்ணங்களை சிந்திக்க வைப்பார். அடுத்தவரை பற்றி எப்போதும் உயர்வாகவே பேசுவார். மற்றவர்களையும் பேச வைப்பார். எண்ணுவதை பெரியதாக எண்ண வேண்டும் என்பார். கஷ்டப்பட்டு பெரிய லட்சியத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் விதைப்பார். அவருக்கு கீழ் பணி என்பது கடவுள் கொடுத்த வரம். அவரிடம் சேர்ந்த பிறகே நாட்டை பற்றிய விசாலமான பார்வை ஏற்பட்டது.
* மாணவர்களும், கலாமும்- இந்த ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது?
நாட்டில் 18 கோடி இளைஞர்கள், மாணவர்களை அப்துல் கலாம் இதுவரை சந்தித்துள்ளார். நாட்டின் வருங்காலத்தை நிர்ணயிப்பது குழந்தைகள் தான். அவர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைக்க வேண்டும் என அடிக்கடி கலாம் கூறுவார்.
உறங்க விடாமல் செய்வதே கனவு:


* கலாமிடம் கவர்ந்த குணம் எது?
முடியாது என ஒரு போதும் சொல்ல மாட்டார். எது முடியாத செயலாக இருக்கிறதோ அதை செய்ய நினைப்பார். ஒருவர் குறித்து புறம் கூறினால் கேட்டு கொள்வார். பின் அவரை பற்றிய நல்ல குணங்களை பட்டியலிடுவார். முடிந்த விஷயங்களை பேச மாட்டார். செய்ய வேண்டியதை மட்டும் பேசுவார். உறங்கும் போது வருவதல்ல கனவு... உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு... என நம்பிக்கையை விதைப்பார்.
* கலாம் எண்ணப்படி 2020ல் இந்தியா வல்லரசாகுமா?
கலாம் ஜனாதிபதியாக இருந்த போது, 15 மாநிலங்களுக்கு சென்று அதிகாரிகளுடன் பேசும் வாய்ப்பு கிட்டியது. அம்மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை இயற்றும் சவாலான பணியிலும் ஈடுபட்டேன். அவை வளர்ந்த மாநிலங்களாக உருவாவதற்கான திட்டங்களை தீட்டி செயல்படுத்த தூண்டுதலாக இருந்தார். அம்மாநில சட்டசபைகளிலும் கலாம் பேசினார். மாநிலங்களின் வளம், சிறப்பு, பிரச்னைகள் என்ன என கண்டறிந்து வளர்ச்சி பாதையில் செல்ல முடியும் என்பதற்கான திட்டங்களை விளக்கினார். அவரும், நானும் 'ஏ மேனிபெஸ்டோ பார் சேஞ்ச்' (மாற்றத்திற்கான ஒரு சாசனம்) நூலை எழுதியுள்ளோம். ஊராட்சி முதல் பார்லிமென்ட் வரை வளர்ச்சி அரசியலில் எப்படி ஈடுபடுவது, அதற்கு எப்படி சமூக, பொருளாதார கொள்கை மாற்றங்களை கொண்டு வருவது என பல அம்சங்களை கலாம் தெரிவித்துள்ளார். அதன்படி செயல்பட்டால், 2020ல் இந்திய வளர்ந்த நாடாகும்.
தொடர்புக்கு: vponraj@gmail.com

Wednesday, June 20, 2012

சுடு தண்ணீரில் துணியை ஏன் துவைக்க கூடாது???

பொதுவாக அனைவரும் துணியை துவைப்பது என்றால் நீரில் அலசி, பின் சோப்பு நீரில் ஊற வைத்து, பிறகு நல்ல தண்ணீரில் அலசுவோம். ஆனால் கரையானது நன்கு போக வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் ஊற வைத்து அலசுவோம். இதனால் துணியில் கரை மட்டும் செல்வதில்லை துணியின் தரமும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே துணிகளை சுடு ததண்ணீரில் அலசும் போது பார்த்து அலச வேண்டும்.
அலசினால் என்ன ஏற்படும்...?
1. துணி சுருக்கிவிடும் : துணிகளை லான்டரியில் போடுகிறோம், அங்கு துணிகளில் உள்ள கரைகள் நீங்க சுடு தண்ணீரை பயன்படுத்துகிறார்கள், அதனால் துணிகளானது கரை இல்லாமல் பளிச்சென்று இருக்கிறது. ஆனால் அந்த துணிகளைப் போட்டு பார்த்தால் இறுக்கமாக இருக்கும். அப்போது நீங்கள் குண்டாகிவிட்டீர்கள் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் துணியானது சுருங்கி இருக்கும். ஏனெனில் சுடு நீரானது துணியின் மெட்டீரியலை பாதிக்கும்.
2. நிறம் மங்குதல் : சுடு நீரானது துணியின் கலரை நீக்கும் சக்தியுடையது. ஏனெனில் சுடு தண்ணீரில் உள்ள வெப்பத்தின் அளவானது துணியில் உள்ள நிறத்தை அகற்றிவிடும்.
3. நூல் நஞ்சிவிடுதல் : சுடு நீரில் அலசும் துணி சுருங்குவதால், துணியில் உள்ள நூல்கள் வலுவிழந்து நஞ்சிவிடுகிறது. மேலும் சுடு தண்ணீரில் ஊற வைத்து துவைக்கும் துணியில் அழுக்கை போக்க பிரஸ் போட்டால் கண்டிப்பாக துணியானது கிழிந்து விடும்.
நினைவில் கொள்ள வேண்டியவை...
1. துணியை வாங்கும் போது அதில் துணியைப் பற்றி லேபிளில் போட்டிருப்பதை படிக்க வேண்டும். முக்கியமாக துணியை சுடு நீரில் அலசலாமா, வேண்டாமா என்று பார்ப்ப வேண்டும். காட்டனை சுடு தண்ணீரில் அலசலாம், ஆனால் லேபிளில் கொடுத்திருப்பதையும் பார்க்க வேண்டும்.
2. வேண்டுமென்றால் துணியின் சிறு பகுதியை சுடு நீரில் 4 5 நிமிடம் வரை ஊற வைத்து, சுருங்கியிருந்தாலோ அல்லது நிறம் போனாலோ அந்த துணியை சுடு நீரில் போட வேண்டாம். இதனால் துணியை சுடு நீரில் போடலாமா வேண்டாமா என்று தெரிந்து விடும்.
3. பொதுவாக துணிகளை 10 15 நிமிடத்திற்கு மேல் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டாம். இதனால் எந்த துணியானாலும் சுருக்கத்தை அடையும்.
4. சுடு நீரில் அலச இருக்கும் துணியை வெதுவெதுப்பான தண்ணீரில் அலசினால் துணியானது விரைவில் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
துணிகள் நீண்ட நாட்கள் வர வேண்டும் என்று நினைத்தால், சுடு நீரில் பெரும்பாலும் அலசுவதை தவிர்க்கவும். கரைகள் போக சுடு நீரில் போடுவதற்கு பதில் மற்ற பொருட்களான எலுமிச்சை, பேக்கிங் சோடா அல்லது வினிகரை பயன்படுத்தலாம்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/why-not-wash-clothes-hot-water-001391.html

கரை இல்லாமல் துணிகளை அழகாக வெச்சுக்க ஆசையா?

இப்ப வீட்ல இருக்கிற துணிகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனா அப்படி இருக்கிற துணிகளை நிறைய பேருக்கு பத்திரமா அழகா வெச்சுக்க தெரியவில்லை. அப்படி தெரியாத அவர்கள், மேலும் மேலும் நிறைய துணிகளை வாங்கி அதையும் ரொம்ப நாள் வெச்சுக்கத் தெரியாம அடுக்கி வெச்சுக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களுக்கு துணிகளை அழகா வெச்சுக்க இதோ சில டிப்ஸ்...

1. துணிகளை அலசி நீலம் போடும் போது, நீலம் ஒன்று போல் தண்ணீரில் பரவ சிறிய முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்து துணிகளை அலசினால் துணியானது வெண்மையாக, அழகாக காணப்படும்.

2. பட்டுப் புடவைகளை துவைக்கும் போது அதனுடன் பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் பூச்சி வெட்டாமலும் சாயம் போகாமலுமிருக்கும். மேலும் ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

3. துணிகளில் படும் டீக்கரையைப் போக்க சர்க்கரையை உபயோகிக்கலாம். மேலும் வெள்ளைத் துணிகளில் படும் கரையைப் போக்க ப்ளீச்சிங் பவுடரை தண்ணீரில் கரைத்து உபயோகிக்கலாம்.

4. வெள்ளை நிற சட்டைகளை நீலநிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலநிறத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

5. எண்ணெய் கறையை போக்க ப்ளாடிங் பேப்பரை துணியின் மேலும் கீழும் வைத்து அயர்ன் பண்ணினால், எண்ணெய் கரை போய்விடும்.
http://tamil.boldsky.com/home-garden/improvement/2012/tips-keep-your-dresses-safely-001210.html

வருவாய்,கல்வியில் இந்திய அமெரிக்கர்கள் டாப்

வாஷிங்டன் : அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள், உயர்ந்த வருமானம் மற்றும் சிறந்த கல்வி பெற்றவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா வாழ் ஆசியர்கள் 3வது இடத்தில் உள்ளனர். அமெரிக்க மக்கள் தொகையில் ஆசியர்கள் அதிக படிப்பறிவு பெற்றவர்களாகவும், கூடுதல் வருமானம் ஈட்டுபவர்களாகவும் உள்ளதாக தி ரோஸ் ஆஃப் ஆசியன் அமெரிக்கன் என்ற தலைப்பில் ப்யூ ரிசர்ச் சென்டர் வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் 3.18 மில்லியன் இந்தியர்கள், 4 மில்லியன் சீனர்கள், 3.4 மில்லியன் பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஆகியோரின் ஆண்டு வருமானம் 88,000 டாலர்களாக உள்ளது. இது அனைத்து ஆசியர்களின் ஆண்டு வருமானமான 66,000 டாலர்களையும், அமெரிக்கர்களின் ஆண்ட வருமானமான 49,800 டாலர்களையும் விட மிக அதிகமாகும். இந்திய அமெரிக்கர்களின் சொந்த ஆண்டு வருமானம் 65,000 டாலர்களாகவும், அனைத்து ஆசிய அமெரிக்கர்களின் வருமானம் 48,000 டாலர்களாகவும், அமெரிக்கர்களின் வருமானம் 40,000 டாலர்களாகவும் உள்ளன. அமெரிக்காவில் வாழும் 70 சதவீதம் இந்தியர்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். 
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=490579

Monday, June 18, 2012

பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் புதிய முடிவு: 71 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்ற திட்டம்

நியூயார்க்:நோக்கியா, பெப்சி, சோனி, யாகூ போன்ற 12க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள், இவ்வாண்டு 71 ஆயிரம் ஊழியர்களை, பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்கள், உலகில் பல நாடுகளில் தங்களது தயாரிப்பு நிறுவனங்களை நிறுவி, அவற்றில் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, குளிர்பான நிறுவனமான பெப்சிகோ, மின்னணுப் பொருட்களைத் தயாரிக்கும் சோனி, கணினி துறையில் உள்ள ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,), விமான நிறுவனமான லுப்தான்சா, கேமராக்கள் தயாரிப்பு நிறுவனமான ஒலிம்பஸ் உட்பட 12 நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 71 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்து அறிவித்துள்ளன.

இதில், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் நோக்கியா நிறுவனம் அடுத்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது பெருகி வரும் பலத்த போட்டிக்கு இடையே தாக்குப்பிடிக்க முடியாத நிலை இருப்பதும், ஊழியர்களை குறைக்க இந்த நிறுவனம் முடிவெடுத்ததற்கு காரணமாகி விட்டது. ஊழியர்களை குறைப்பதன் மூலம், 200 கோடி டாலர் சேமிக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.

அதேபோல், கேமராக்களைத் தயாரித்து விற்று வரும் பிரபல ஒலிம்பஸ் நிறுவனம் இன்னும் இரண்டாண்டுகளில் 40 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. இதில், இம்மாதம் மட்டும் 2700 பேரை வெளியேற்றிவிட நடவடிக்கையைத் துவக்கி உள்ளது. கணினி தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, ஹியூலட் பேக்கார்டு (எச்.பி.,) நிறுவனம் அடுத்த இரண்டாண்டுகளில் 27 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது.

இதேபோல் மேற்கண்ட ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனமும் கணிசமான அளவுக்கு ஊழியர்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இன்னும் ஓராண்டில், 71 ஆயிரம் ஊழியர்கள் இந்த நிறுவனங்களின் பல்வேறு நாடுகளில் உள்ள கிளைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=488635

Tuesday, January 10, 2012

30 மணிநேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி தமிழக இளைஞர் கின்னஸ் சாதனை!

பேரூர்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, 30 மணி நேரம் 6 நிமிடம் தொடர்ந்து பேசி, உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர். நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மாடசாமி, 38. தொடக்கப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை, கேரளாவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கம்பம், ராயப்பட்டியில் உள்ள அரசு பள்ளியிலும், திருவனந்தபுரம் பல்கலையில், பி.எஸ்.சி., பட்டமும் பெற்றுள்ளார். தற்போது, கேரளா மாநிலம், இடுக்கிமாவட்டம், பீர்மேடு பகுதியில், கடந்த 1997ம் ஆண்டு முதல், போஸ்டல் அசிஸ்டெண்ட்டாக பணியாற்றி வருகிறார். இவர், சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வரும், உலக சமாதான கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். இந்த அமைப்பு, போர், யுத்தம் இல்லாத உலகம் உருவாக்குவதை நோக்கமாகவும், சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வை முக்கியமாக கொண்டும், செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் உறுப்பினராக உள்ள மாடசாமி, யுத்தமில்லாத உலகம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, வனப்பாதுகாப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்,தொடர்ந்து 30 மணிநேரம் 6 நிமிடம் பேசி, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன், கடந்த 2009ல், அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில், மைக்பேசியா என்பவர், 28 மணிநேரம் தொடர்ந்து பேசியதே, கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது, அந்த சாதனையை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் முறியடித்துள்ளார். இடுக்கி அருகே, பீர்மேடு பகுதியில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில் இச்சாதனையை மாடசாமி நிகழ்த்தியுள்ளார். கோவையில் மாடசாமி கூறியது: ஒவ்வொரு மணி நேரத்துக்கு, ஒரு தலைப்பு வீதம், கூடங்குளம் அணுமின்நிலையம், உலக மகாயுத்தம், அசாம், மேகாலயா, திரிபுரா மாநிலங்களில் லைசென்ஸ் இல்லாமல் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், சோமாலியா நாட்டில் நிலவும் உணவுபஞ்சம், உலகவெப்பமயமாதல் உள்ளிட்ட 30 தலைப்புகளில் பேசினேன். ஒரு மணி நேரத்துக்கு, ஐந்து நிமிடம் இடைவேளை தரப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, உலகவெப்பமயமாதல் குறித்து, பள்ளி குழந்தைகளிடையே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன், என்றார்.

Friday, December 23, 2011

உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 10 இந்திய இளைஞர்கள்

வாஷிங்டன்: நாளைய உலகின் 'எதிர்கால நட்சத்திரங்கள்' பட்டியலில் 30 வயதுக்கு குறைவான 10 இந்திய இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில், நிதி, ஊடகம், சட்டம், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம், எரிசக்தி உள்ளிட்ட 12 துறைகளில் சர்வதேச அளவில் சாதனை சுவடுகளை பதித்து வரும் 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களது விவரம்:

1. பரம் ஜக்கி (வயது 17). இவர் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை, ஆக்ஸிஜனாக மாற்றும் பாசியை (algae) அடிப்படையாகக் கொண்ட கருவியை உருவாக்கியுள்ளார்.

2. 23 வயதான விவேக் நாயர். டமாஸ்கஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பின் தலைமை செயல் அதிகாரி. கார்பனைக் கட்டுப்படுத்த உதவும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்.

3. குணால் ஷா (வயது 29). இவர் பிரபல கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித பட்டதாரியான இவர், கடந்த 2004ம் ஆண்டில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். 27 வயதில் இதன் நிர்வாக இயக்குனர் பதவிக்கு வந்துவிட்டார்.

4. விகாஸ் மொகிந்திரா. 25 வயதான இவர் பேங்க் ஆப் அமெரிக்கா மெர்ரில்லிஞ்ச் நிறுவனத்தின் நிதி ஆலோசகராக உள்ளார்.

5. மன்வீர் நிஜார். 28 வயதான இவர் சிட்டி வங்கியின் ஐரோப்பிய முன்பேர பங்கு வர்த்தக பிரிவின் இணைத் தலைவராக உள்ளார். லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்சில் படித்தவர்.

6. 29 வயதான ராஜ் கிருஷ்ணன், பயலாஜிகல் டைனமிக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குனராக உள்ளார். புற்றுநோயைக் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனையை கண்டுபிடித்தவர் இவர். ரத்தத்தின் மின்வீச்சை வைத்து புற்றுநோயை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்.

7. சிதாந்த் குப்தா. 27 வயதான வாஷிங்டன் பல்கலைக்கழக மாணவரான இவர், மின்சாரம், கேஸ், வெப்பத்தின் தேவையைக் குறைக்கும் சென்சார்கள் மற்றும் சாப்ட்வேரை உருவாக்கி வருகிறார்.

8. 24 வயதான நிகில் அரோரா, இவர் குறைந்த விலையில் உண்ணத்தகுந்த காளான்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர் ஆவார்.

9. மன்ஜீத் அகுஜா- 17 வயதான இவர் சிஎன்பிசியின் தயாரிப்பாளராகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையில் வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இவர்கள் உள்பட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.

Friday, December 2, 2011

உண்மைஉணர்த்தும் "புரோக்கரிங்நியூஸ்' குறும்படம்; அரசியல்- கம்பெனிகளால் வளைக்கப்படும்மீடியா

கோவா: பணம் கொடுத்து தங்கள் செல்வாக்கை உயர்த்தவும், பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள், மீடியாக்களை தவறாக பயன்படுத்துகின்றன என்ற அம்சத்தை கொண்டு பிரசார் பாரதி ஒரு குறும்படத்தை உருவாக்கியிருக்கிறது. இதில் பத்திரிகைகள் எப்படி தரம் தாழ்ந்து போயிருக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது.
பிரசார் பாரதி, தூர்தர்ஷனுக்காக - உமேஷ் அகர்வால் உருவாக்கியிருக்கும் "புரோக்கரிங் நியூஸ்'. பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிப்படுத்துகிறது. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பெரிய நிறுவனங்கள் பணம் கொடுத்து நாளிதழ்களிலும், டி. வி.,க்களிலும் கவரேஜ் பெறுவதை காண்பிக்கும்புரோக்கரிங் நியூஸ் என்ற டாகுமென்டரி படத்தில் வரும் சில தகவல்கள் இதோ:

* லோக் மத், மஹாராஷ்டிரா டைம்ஸ் மற்றொரு தினசரி, மூன்றிலும், மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் பற்றிய வெளியான கட்டுரைகள் ஒரே மாதிரியாக, வார்த்தைக்கு வார்த்தை ஒன்றாக, ஆனால் மூன்று வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்களில் வெளியாகியிருக்கிறது.

* ஆந்திராவில், பி.கே. ராமராவ் என்ற வேட்பாளர் ஈநாடு தினசரியில் நல்ல கவரேஜ் பெற்றதற்கு, ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் கமிஷனுக்கு, இதை தான் தேர்தலுக்கு செய்த செலவாகவும் காட்டியிருக்கிறார் இதுவும் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

* காங்கிரஸ் பீகாரில் சரித்திரம் படைக்கவிருக்கிறது என்று ஒரு இந்தி பேப்பரில் எட்டு காலம் தலைப்புச் செய்தி. தலைப்பைத் தவிர வேறு செய்தி கீழே இல்லை.

* பர்க்கா தத், நிரா ராடியா இருவருக்கும் இடையே கருணாநிதி, ராஜா,, டி.ஆர்., பாலு, கனிமொழி என்று பல திமுக தலைவர்களை குறிப்பிட்டு, மந்திரி பதவி பெறுவது பற்றிய பேச்சின் ஆடியோ குரல்.

* சி.என்.என்., ஐபின் ராஜ்தீப் சர்தேசாய் பர்காதத் சில பத்திரிகை/டிவி ஆசிரியர் திரைப்பட இயக்குனர் மகேஷ் பட், ஷோபா டே போன்றவர் மீடியா துறையில் உள்ளவர்களை பற்றி கருத்துக்கள்.

* ஐபிஎல் கிரிக்கெட்டில் மீடியாவின் பங்கு , திமுக கட்சி பிரமுகர்களுக்கு ( சன்டிவி, கலைஞர் டிவி), அ.தி.மு.க.,வினருக்கு ஜெயா டிவி, விஜய்காந்த - கேப்டன் டிவி, பாட்டாளி மக்கள் கட்சி - மக்கள் டிவி, காங்கிரஸ் - வசந்த் டிவி, கேரளாவிலும், ஆந்திராவிலும் அரசியல் பிரமுகர்கள் ஆதிக்கத்தில் பல டிவி சேனல்கள் இயங்குகிறது. பல டிவி சேனல்களில் பிரத்யேக பேட்டிக்கு, பணம் பெறப்படுவதும், இது 50% பணமாக, 50% செக் மூலமாக பெறுகின்றனர்.என்றும் காட்டப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து, தாங்கள் விரும்பியவாறு செய்திகள், கருத்துக்கள், பப்ளிசிட்டி பெறுவதற்கு அதிகம் ஈடுபடுபவர்கள், அரசியல்வாதிகளா, பெரிய கம்பெனிகளா (வியாபார நிறுவனங்களா), என்பது கடினமான கேள்வி. திரைப்படத்துறையிலும் இந்த ட்ரென்ட் வந்துவிட்டது.

உமேஷ் அகர்வால், ஒன்றரை ஆண்டுகாலம் உழைத்து இந்த ஒரு மணி நேர டாகுமென்ட்ரியை உருவாக்கியுள்ளார். கடந்த (30ம் தேதி ) திரைப்பட விழாவில், திரையிடப்பட்டபோது, அரங்கு நிரம்பியது. படத்தை தொடர்ந்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக, கேள்வி-பதில் விவாதம் நடைபெற்றது. பிரசார் பாரதியிடமிருந்து இந்த படத்தின் டி.விடி பெறலாம். லஞ்சமற்ற இந்தியா விரும்பும் அனைவரும் பார்த்தால் நல்லது.

சமீபத்தில் கூட , பணம் பெற்ற செய்திகள் நாளிதழ் மற்றும் டிவியில் வெளியிடுவது குறித்து பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் இரு நிபுணர்கள் கொண்ட கமிட்டி, விஷயத்தை முழுமையாக ஆராய்ந்து, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன் சுருக்கம், இணைய தளத்திலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. - ரஜத்